கடலூர் கால்நடை மருத்துவமனை எதிரே இளைஞர்கள் 2-வது நாளாக மறியல்
கடலூர் கால்நடை மருத்துவமனை எதிரே இளைஞர்கள் 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புதுறையில் காலியாக உள்ள 34 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை மாவட்ட இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான நேர்காணல் கடந்த 22-ந் தேதி முதல் அடுத்த மாதம்(மார்ச்) 4-ந் தேதிவரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நேர்காணல் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் நேர்காணல் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நேர்காணலில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் காலையில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களது மதிப்பெண் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள மண்டல கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் மருத்துவமனை முன்பு திரண்டனர். ஆனால் நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை அறிந்த அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.
நேர்காணல் பகுதி பகுதியாக நடைபெறும் என்பதால் நேற்று 2-வது பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேர்காணலில் கலந்துகொள்வதற்காக வந்தனர். நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டதை அறிந்து ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்றும் திடீரென மருத்துவமனைக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து இளைஞர்கள் கூறும்போது நேர்காணல் தள்ளி வைக்கப்பட்ட விவரத்தை தங்களுக்கு தெரிவிக்கவில்லை. நாங்கள் வெகு தொலைவில் இருந்து பணத்தை செலவு செய்து வருகிறோம். எனவே நேர்காணல் நடைபெறும் தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த கடலூர் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் போராட்டம் நடத்திய இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த நேர்காணல் ஒத்திவைப்பு ஒரு மாவட்டத்தை சார்ந்தது அல்ல. மாநிலம் முழுவதும் நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நேர்காணல் நடைபெறும் தேதியை தமிழக அரசுதான் அறிவிக்க வேண்டும். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினார்கள். இதையடுத்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். நேற்று 2-வது நாளாக நடந்த இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.