வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சிறப்பு நிதி பெற விண்ணப்பிக்கலாம் 26-ந் தேதி கடைசி நாள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் சிறப்பு நிதி பெற விண்ணப்பிக்க 26-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மக்கள்நிலை ஆய்வின் அடிப்படையிலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியல் மற்றும் ஏ.ஏ.ஒய். கார்டு திட்ட பயனாளிகளிடம் இருந்து கூடுதல் விவரங்கள் பெறப்பட்டு இருந்தன.
இதுதவிர மற்ற விடுப்பட்ட விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்கள் மற்றும் தகுதியானவர்கள் அனைவரும் விடுபடாமல் பயன் பெறுவதற்கு ஏதுவாக இதற்குரிய புதிய விண்ணப்பத்தினை www.tnrd.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து, தமிழக அரசின் சிறப்பு நிதிஉதவி திட்டத்தின் கீழ் பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய விண்ணப்பத்தை கிராமப்புற பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மற்றும் நகர்புறங்களுக்கு பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்களில் தெரிவித்துள்ளப்படி அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒப்படைத்து அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பத்தினை வருகிற 26-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒப்படைத்து அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.