ஏ.டி.எம். எந்திரம் மூலம் வங்கி கணக்கில் கள்ள நோட்டுகளை போட்ட வியாபாரி கைது
ஏ.டி.எம். எந்திரம் மூலம் தனது வங்கி கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுகளை போட்ட வியாபாரி கைது செய்யப்பட்டார்.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் டோம்பிவிலியில் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. சம்பவத்தன்று அந்த மையத்துக்கு வந்த வங்கி ஊழியர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து, அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்தனர். பின்னர் அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணி சரிபார்த்தனர்.
அப்போது அதில் 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகள் சில இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள், வேறு கள்ள நோட்டுகள் இருக்கிறதா? என்று தீவிரமாக சரிபார்க்க தொடங்கினர். அப்போது 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகள் 25 எண்ணிக்கையில் சிக்கின.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் டோம்பிவிலி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
இதில் டோம்பிவிலியை சேர்ந்த உதிரி பாக வியாபாரி சுகேஷ் என்பவர்தான், ஏ.டி.எம். எந்திரம் மூலம் தனது வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரத்துக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை போட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு கள்ளநோட்டுகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூபாய் நோட்டுகள் சிறிதளவு கசங்கி இருந்தால் கூட அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வெளியே தள்ளி விடும் ஏ.டி.எம். எந்திரங்களை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் கள்ள நோட்டுகளை ஏ.டி.எம். எந்திரம் ஏற்றுக்கொண்ட விவகாரத்தில், அதன் தொழில் நுட்பத்தில் கேள்விக்குறி எழுந்து உள்ளது.