நாகர்கோவிலில் பரபரப்பு ரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்

நாகர்கோவிலில் ரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. அங்கு குடியிருந்தவர்கள் கதறி அழுதபடி பொருட்களை அப்புறப்படுத்தினர்.

Update: 2019-02-22 23:25 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பறக்கிங்கால் பகுதியில் ரெயில்வே விரிவாக்க பணிகள் நடைபெற இருக்கிறது. இதையடுத்து பறக்கிங்கால் பகுதியில் உள்ள 65 வீடுகளை தாங்களாகவே அப்புறப்படுத்துமாறு கூறி ரெயில்வே நிர்வாகம் சார்பில் பலமுறை குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள வீடுகள் ஒவ்வொன்றிலும் அறிவிப்பு நோட்டீசு ஒன்றை ரெயில்வே ஊழியர்கள் ஒட்டினர். அதில் வருகிற 22-ந் தேதி (அதாவது நேற்று) காலை 10 மணிக்கு தங்கள் வீடுகள் இடிக்கப்படும். அதற்கு முன்னதாகவே தங்கள் உடமைகளோடு ரெயில்வே இடத்தில் இருந்து காலி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் எனக்கூறப்பட்டு இருந்தது. மேலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டது.

இதையடுத்து பறக்கிங்கால் பகுதி மக்கள் நேற்று முன்தினம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆகியோரை சந்தித்து தங்களுக்கு மாற்று இடம் வழங்கியபிறகு தங்களது குடியிருப்புகளை ரெயில்வே நிர்வாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதற்கிடையே நேற்று காலை பறக்கிங்கால் பகுதியில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் என ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். அவர்கள் கலவர தடுப்பு உடை அணிந்தும், கலவர தடுப்பு உபகரணங்களோடும் அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு தொற்றியது.

சிறிது நேரத்தில் ரெயில்வே அதிகாரிகள் வீடுகளை இடிக்க பொக்லைன் எந்திரங்கள் மற்றும் ஊழியர்களுடன் அங்கு வந்தனர். அப்போது ரெயில்வே அதிகாரிகள் வீடுகளை இடிக்கப்போகிறோம், எனவே பொருட்களை அப்புறப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினர். இதை கேட்டதும் அப்பகுதியில் வசிக்கும் பெண்களும், குழந்தைகளும் கதறி அழுதனர். அவர்களது அழுகை சத்தம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இந்த முகவரியில்தான் அரசு எங்களுக்கு அடையாள அட்டை வழங்கி உள்ளது. வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இப்போது திடீரென எங்களை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கு போவோம்? எனவே அரசு மாற்று இடம் தந்தபிறகு வீட்டை இடித்து அகற்றுங்கள் என்று பலர் கதறி அழுதபடியே கூறினர்.

ஆனாலும் ரெயில்வே அதிகாரிகள், இந்தபகுதி ரெயில்வே பாதை விரிவாக்க பணிக்கு தேவைப்படுவதால் உடனடியாக வீடுகளை காலி செய்யுங்கள் என்று உறுதிபட தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்து கதறி அழுத மக்களை போலீசாரும், ரெயில்வே அதிகாரிகளும் சமரசம் செய்தனர். அப்போது அதிகாரிகள், ரெயில்வே நிர்வாகம் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதால் மேற்கொண்டு கால அவகாசம் எதுவும் வழங்க இயலாது. எனவே அனைவரும் வீடுகளை காலி செய்யுங்கள் என்று கூறினர்.

இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் கண்ணீரும், கம்பலையுமாக வீடுகளுக்குள் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். வீடுகளை இழந்த மக்கள் பொருட்களை தங்கள் தலையில் வைத்துக் கொண்டு எங்கு செல்வது எனத்தெரியாமல் குழந்தைகளோடு பரிதவித்தது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. பின்னர் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அங்குள்ள 65 வீடுகளை ஊழியர்கள் இடித்து அகற்றினர். இந்த பணி முடியும் வரையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

பறக்கிங்கால் பகுதியில் வீடுகள் இடிக்கப்படும் தகவல் அறிந்த குமரி மாவட்ட பால்வளத்தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எஸ்.ஏ.அசோகன் அங்கு விரைந்து சென்றார். அவர் பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செல்போன் மூலம் கலெக்டரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்