நிறுத்தத்தில் பஸ் நிறுத்தப்படாததற்கு எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்
நிறுத்தத்தில் பஸ் நிறுத்தப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த செரப்பனஞ்சேரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ் நின்று செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த நிறுத்தத்தில் பஸ் நிறுத்தப்படுவதில்லை.
இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பஸ் நின்று செல்வது குறித்து பல முறை காஞ்சீபுரம் போக்குவரத்து பொதுமேலாளரிடம் பேசப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி அரசு பஸ்சை செரப்பனஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்லவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
சாலை மறியல்
இருப்பினும் அந்த நிறுத்தத்தில் தொடர்ந்து பஸ் நிறுத்தபடுவதில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியின் மாவட்ட விவசாய சங்க செயலாளர் நேரு, மாவட்ட விவசாய சங்க துணை செயலாளர் லிங்கநாதன், ஸ்ரீபெரும்புதூர் வட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நேற்று அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீஸ் சப் இனஸ்பெக்டர் மனோகரன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குறைகளை கேட்டறிந்தனர். அப்போது செரப்பனஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் பஸ் நின்று செல்லும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள், மாணவ மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.