விளம்பர பலகைகள் வைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

விளம்பர பலகைகள் வைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2019-02-22 21:57 GMT
படப்பை,

விளம்பர பலகைகள், வைப்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நடைமுறை படுத்துவது குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாகவும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள் வைத்திருந்தால் அகற்றுவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இதில் அணைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ஊத்துக்கோட்டை

பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், மிஸ்கிராஜாசிங், கருணாநிதி, அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் தி.மு.க.வை சேர்ந்த கிறிஸ்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ராஜா, புரட்சிபாரதம் கட்சியை சேர்ந்த ஸ்ரீதர், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு செயல் அலுவலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நகர செயலாளர்கள் அ.தி.மு.க.வை சேர்ந்த ஷேக்தாவூத், தி.மு.க.வை சேர்ந்த அப்துல்ரஷீத், பா.ஜ.க.வை சேர்ந்த தயாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பாக அரசியல் கட்சியினர், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பேனர் கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமை தாங்கினார். துப்புரவு மேற்பார்வையாளர் கோபி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மு.க.சேகர், ஓடை ராஜேந்திரன். தி.மு.க. நிர்வாகிகள் டி.கே. ராஜா, அர்ச்சுனன், பா.ஜ.க. நிர்வாகிகள் சீனிவாசன், வேந்தன், பா.ம.க. நிர்வாகி வடிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்