கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு; தேர்வுக்கு வந்தவர்கள் சாலை மறியல்

தூத்துக்குடியில் கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டதை கண்டித்து நேற்று நேர்காணலுக்கு வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-22 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பதவிக்கு நேர்காணல் விண்ணப்பித்தவர்களுக்கான நேற்று முதல் 4.3.2019 வரை (ஞாயிறு நீங்கலாக) தூத்துக்குடி, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நேர்காணல் திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் நேர்காணலில் பங்கேற்பதற்காக சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து புதுகிராமம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்