நாமக்கல்லில் ரூ.14.60 கோடியில் கட்டிட பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.14.60 கோடி மதிப்பீட்டில் அரசு அலுவலகங்களுக்காக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-02-22 22:00 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பல்வேறு அரசுதுறை அலுவலகங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோரால் பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி ரூ.14.60 கோடி மதிப்பீட்டில் 76 ஆயிரத்து 632 சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. மொத்தம் 3 தளங்களை கொண்ட இக்கட்டிடத்தில் 12 அரசுத்துறை அலுவலகங்களும், 3 கூட்டரங்குகளும், 3 கலந்தாய்வு அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.

இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலன் அலுவலகம், வேளாண்மைத்துறையின் விவசாய பயிற்சி மையம், மண் பரிசோதனை ஆய்வகம், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், தமிழ்நாடு உணவு கழகம் மற்றும் மருத்துவம் நிர்வாக அலுவலகம் ஆகிய துறை அலுவலகங்களும், முதல் தளத்தில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், பட்டு வாரிய அலுவலகம், கைத்தறிகள் மற்றும் ஜவுளி அலுவலகம் ஆகிய அலுவலகங்களும் கட்டப்படுகின்றன.

மேலும் இரண்டாம் தளத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், பால்வளத்துறை அலுவலகம், கால்நடைத்துறை அலுவலகம், நிதி தணிக்கை அலுவலகம் ஆகிய துறைகளும் என மொத்தம் 12 துறை அலுவலகங்கள் செயல்படுவதற்கான கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டிடங்களின் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் வெங்கடேசன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்