அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் சரண்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த போலீஸ்காரர், ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அம்பத்தூர்,
சென்னை வில்லிவாக்கம் பாட்டைசாலையைச் சேர்ந்தவர் முருகன் (வயது 39). இவருடைய மனைவி அன்னிபெசன்ட் (39). இருவரும் சென்னை காவல்துறையில் போலீசாக பணியாற்றி வருகின்றனர்.
முருகன், டி.ஜி.பி. அலுவலகத்திலும், அன்னிபெசன்ட் சென்னை தலைமைச் செயலகத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அன்னிபெசன்ட், தனக்கு அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் பழக்கம். அவர்கள் மூலம் அரசு வேலை மற்றும் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக கூறி மற்றொரு போலீஸ்காரரான நாசர்(40) மற்றும் ரமேஷ் உள்பட 16 பேரிடம் இருந்து சுமார் ரூ.45 லட்சம் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டதும், இதற்கு அவருடைய கணவர் முருகன் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.
போலீஸ்காரர் சரண்
இதுகுறித்து ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக பெண் போலீஸ் அன்னிபெசன்டை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவருடைய கணவர் முருகனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் முருகன், நேற்று முன்தினம் இரவு ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், பண மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
கைதான போலீஸ்காரர் முருகனை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.