சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது 4-வது நடைமேடையில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் அருகே பெட்டி ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. சிறிது நேரத்தில் அந்த பெட்டி அதிர்வதாக அங்கிருந்த பயணிகள், போலீஸ் உதவி எண்ணில் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக எழும்பூர் ரெயில்வே போலீசார், அந்த மர்மபெட்டியை கைப்பற்றி, பயணிகள் உடைமைகளை ‘ஸ்கேன்’ செய்யும் எந்திரத்தில் வைத்து சோதனை செய்தனர். அதில், அந்த பெட்டியின் உள்ளே வயர் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. எனவே அது வெடிகுண்டாக இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்துவந்த வெடிகுண்டு நிபுணர்கள், மர்ம பெட்டியை சோதனை செய்தனர். அதில், அந்த பெட்டியில் எந்த ஒரு ஆபத்தான பொருட்களும் இல்லை என்று உறுதி செய்தனர். அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.