கூடலூர்-கேரள சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்-கேரள சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-02-22 22:45 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது. ஆறுகளில் தண்ணீர் வரத்து பெருமளவு குறைந்து விட்டது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் தடுப்பணைகளிலும் தண்ணீர் குறைந்து வருகிறது.

விவசாயத்துக்கு தேவையான பாசன நீர் வரத்து இல்லாததால் கோடை வெயிலை சமாளித்து வளரக்கூடிய பாகற்காய், பஜ்ஜி மிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். இருப்பினும் மேலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்தால் விளைச்சல் பாதிக்கும் சூழல் உள்ளது. இதனால் கோடை மழை பெய்யுமா? என்று விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுகிறது. நேற்று மாலை 3 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது கூடலூர் அருகே பாடந்தொரை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது.

இதனால் கூடலூர்- கேரள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை மின்வாள் கொண்டு அறுத்து அகற்றினர். பின்னர் மாலை 4.30 மணிக்கு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் சுமார் 1.30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.

பந்தலூர் தாலுகாவில் நேற்று பலத்த காற்று வீசியது. இதனால் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. தொடர்ந்து மின்சார தடையும் ஏற்பட்டது. இதேபோல் கூவமூலா பகுதியில் புஷ்பராஜ் என்பவரின் வீட்டு மேற்கூரை மீது மரம் விழுந்தது. இதில் மேற்கூரை சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வன காப்பாளர் லூயிஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்