கிருமாம்பாக்கம் ஏரியை சுற்றுலா தலமாக மாற்றும் திட்டம் அமைச்சர் கந்தசாமி, பணிகளை தொடங்கி வைத்தார்

கிருமாம்பாக்கம் ஏரியை ரூ.5¼ கோடி செலவில் சுற்றுலா தலமாக மாற்றும் திட்டத்தை அமைச்சர் கந்தசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-21 23:30 GMT
பாகூர்,

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் உள்ள ஏரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு குழாம், உணவகம், கண்கவர் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டு அந்த ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படுகிறது. புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து மத்திய அரசின் திட்டமான ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 26 லட்சம் செலவில் இந்த திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து திட்ட பணிகளை தொடங்கிவைத்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அமைய உள்ள பூங்கா, உணவகம் மற்றும் படகு குழாம் ஆகியவற்றின் மாதிரி வரைபடங்களை பார்வையிட்டு அங்கு அமையவுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கந்தசாமி கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் சுற்றுலா தலம் அமைவிடத்தின் வரைபடத்தையும் அவர் பார்வையிட்டார்.

இந்தநிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை மேலாளர் ராமன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மகாலிங்கம், செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் சீனிவாசன், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் பாலமுரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்