பள்ளி வேன் கவிழ்ந்தது; மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் போதையில் ஓட்டிய டிரைவர் கைது

குன்றத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். போதையில் அந்த வேனை ஓட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-21 20:01 GMT
பூந்தமல்லி,

சென்னையை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை வேனில் சதீஷ் பள்ளிக்கு அழைத்து வந்தார்.

அவர்களுக்கு பாதுகாப்பாக கரைமா நகரை சேர்ந்த சித்ரா (55) என்பவர் வேனில் இருந்தார். தரப்பாக்கம் அருகே வேன் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

6 பேர் படுகாயம்

உடனே வேனில் இருந்த பள்ளி மாணவ, மாணவிகள் சத்தம் போட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேனில் சிக்கிய மாணவர்கள் மற்றும் சித்ராவை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 5 மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். காயம் அடைந்த சித்ரா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டிரைவர் கைது

விபத்துக்கு காரணமாக இருந்த வேன் டிரைவர் சதீஷ், மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து போதையில் வேனை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சதீஷை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்