இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைவதால் தனியார் மருத்துவமனைகளில் தொழிலாளர்களுக்கு சிகிச்சை திருப்பூர் கிளை மேலாளர் பேச்சு

இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைவதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் தொழிலாளர்கள் உயர்தர சிகிச்சை பெறலாம் என, இ.எஸ்.ஐ. திட்ட திருப்பூர் கிளை மேலாளர் பேசினார்.

Update: 2019-02-21 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இ.எஸ்.ஐ. திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாலை அப்பாச்சி நகரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை தாங்கி பேசினார். சங்க கமிட்டி தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக இ.எஸ்.ஐ. திட்ட திருப்பூர் கிளை மேலாளர் காமேஸ்வர் துபே கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இ.எஸ்.ஐ. திட்டத்தில் தொழிலாளர்கள் இணைய வேண்டும். திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். ரூ.21 ஆயிரத்திற்கு கீழே சம்பளம் பெறும் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணையலாம். இ.எஸ்.ஐ. திட்டத்தில் மாத சம்பளத்தில் தொழிலாளர்கள் சார்பில் 1.75 சதவீதமும், தொழில் நிறுவனங்கள் சார்பில் 4.75 சதவீதமும் செலுத்தப்பட்டு வந்தது.

தற்போது இந்த பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஒரு சதவீதம், நிறுவனங்கள் 4 சதவீதம் என 5 சதவீத தொகை மட்டும் செலுத்தினால் போதும். தொழிலாளர்கள் மட்டுமின்றி அவசர காலங்களில் அவரது குடும்பத்தினரும் மருத்துவ சிகிச்சை பெறலாம். இ.எஸ்.ஐ. சார்பில் தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைவதன் மூலம் தனியார் மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை பெறலாம்.

தொழிலாளர்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு நிறுவனங்களுக்கு சென்று விட்டு, பின்னர் வீடு திரும்பும் வரை எந்த விபத்து நடந்தாலும் நிவாரணம் வழங்கப்படும். தொழிலாளர்கள் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கும் ரூ.10 ஆயிரம் வரை தொகை வழங்கப்படும். பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் 6 மாதம் சம்பளத்துடன் விடுப்பும் வழங்கப்படும்.

இதுபோன்று ஏராளமான சலுகைகள் உள்ளன. ஆனால் இது குறித்து தொழிலாளர்களுக்கு தெரிவதில்லை. எனவே இதனை தெரிந்துகொண்டு தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஏராளமான ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொழில்துறையினரின் சந்தேகங்களுக்கு காமேஸ்வர் துபே விளக்கமளித்தார்.

மேலும் செய்திகள்