லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது

லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது. இதுதவிர 312 பவுன் நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2019-02-21 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நெல்லை வண்ணாரப்பேட்டை பரணிநகரைச் சேர்ந்த மாடசாமி சுந்தர்ராஜ் (வயது 48) என்பவர் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 16–ந் தேதி இரவு பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு காரில் வந்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக காரை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது காரில் கத்தை, கத்தையாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, இந்த பணம் எப்படி வந்தது? என்று விசாரணை செய்தனர். இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாக ஒப்பந்தகாரர்களிடம் இருந்து மாடசாமி சுந்தர்ராஜ் லஞ்சம் பெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். இதையடுத்து அவரது அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 19–ந் தேதி மாலை 5 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் உள்ள மாடசாமி சுந்தர்ராஜின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவருடைய முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரெமா மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று முன்தினம் காலை 10 மணி வரை அதாவது 17 மணி நேரம் நடந்தது.

அப்போது அவரது வீட்டில் 7 லட்சத்து 17 ஆயிரத்து 600 ரூபாய் இருந்தது. மேலும் 150 பவுன் தங்க நகைகள், 13 வங்கி கணக்கு புத்தகங்கள், 12 எல்.ஐ.சி. பாலிசிகள் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு வங்கியில் லாக்கர் வைத்திருப்பதும் தெரிய வந்தது. அதில் சோதனை செய்தபோது அங்கு 162 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது.

இதையெல்லாம் போலீசார் பதிவு செய்து கொண்டு, ரூ.7 லட்சத்து 17 ஆயிரத்து 600–ஐ மட்டும் பறிமுதல் செய்தனர். மேலும் வீடு மற்றும் லாக்கரில் இருந்த 312 பவுன் தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை அடிப்படையில் அவர்மீது வழக்கு பதிவு செய்வதா? இல்லையா? என்பதும், நகைகளை பறிமுதல் செய்யப்படுமா? என்பதும் தெரிய வரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இதுபோல் லஞ்ச வாங்கும் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்பான புகார்களை மக்கள் நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்