பாளையங்கோட்டையில் 2 கோவில்களில் உண்டியல் திருட்டு - வாலிபர் கைது

பாளையங்கோட்டையில் 2 கோவில்களில் உண்டியலை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-20 22:45 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டை பஸ்நிலையம் எதிரே உள்ள வேன் நிறுத்தம் அருகே சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று அதிகாலை இந்த கோவிலில் மர்மநபர் புகுந்தார். அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைக்க முயன்றார். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை. இதையடுத்து உண்டியலை இரும்பு கம்பியால் பெயர்த்து எடுத்து தூக்கி சென்றார். இந்த நிலையில் காலையில் அந்த வழியாக சென்ற மக்கள் உண்டியல் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சமீபத்தில் அந்த கோவிலில் கொடை விழா நடந்ததால் அதிகளவு பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர். இதை நோட்டமிட்ட மர்மநபர் உண்டியலை திருடிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே வண்டிமலைச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலும் மர்மநபர் புகுந்து, அங்கிருந்த உண்டியலை திருடிச் சென்றார்.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், பாளையங்கோட்டை கோட்டூரை சேர்ந்த இசக்கி மகன் கார்த்தீசன் (வயது 20) என்பவர் கோவில்களில் உண்டியல்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 உண்டியல்களும் மீட்கப்பட்டன.

இந்த திருட்டு சம்பவங்கள் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்