சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்

சென்னிமலை அருகே கணவன், மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-20 23:45 GMT

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையம் கோனாகாடு கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). விவசாயி. இவர் அங்குள்ள தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருடைய மனைவி துளசிமணி (60). இவர்களுக்கு ராசம்மாள் (45), சுந்தராம்பாள் (37), கோமதி (35) ஆகிய 3 மகள்களும், வெங்கடாசலம் (32) என்ற மகனும் உள்ளனர். இதில் வெங்கடாசலத்துக்கு திருமணம் ஆகவில்லை. தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்.

ராசாம்மாளுக்கு திருமணம் ஆகி கணவர் எத்திராஜுடன் (52) வெள்ளோடு அருகே குட்டபாளையத்தில் வசித்து வருகிறார். 2–வது மகள் சுந்தராம்பாள் பவானி அருகே உள்ள ஜம்பையை சேர்ந்த தங்கவேல் (39) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

3–வது மகள் கோமதிக்கு, ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த ஜோதி என்பவரை எத்திராஜ் திருமணம் செய்து வைத்தார். ஆனால் இந்த திருமணத்துக்கு துரைசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அன்று முதல் துரைசாமியும், துளசிமணியும் மகள்கள் ராசாம்பாள், கோமதியின் குடும்பத்துடனான தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

ராசாம்பாளும், கோமதியும் தங்களது தந்தை துரைசாமியின் சொத்தில் பங்கு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல் துரைசாமியின் சகோதரி காங்கேயத்தை சேர்ந்த கருணாம்பாளும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பவுணர்மியையொட்டி சுந்தராம்பாள் எக்கட்டாம்பாளையத்தில் உள்ள தந்தையின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவரை துரைசாமி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கீரனூரில் உள்ள செல்வநாயகி அம்மன் குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு தரிசனம் செய்துவிட்டு 2 பேரும் எக்கட்டாம்பாளையம் திரும்பினார்கள்.

பின்னர் மகளை துரைசாமி ஜம்பைக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் வீட்டில் பவுர்ணமியையொட்டி பூஜை நடத்தினர். இந்த பூஜை முடிந்ததும் மகன் வெங்கடாசலம் கேரளாவில் உள்ள மீன்குளத்து பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டார்.

அதன்பின்னர் துரைசாமியும், துளசிமணியும் இரவு 10 மணி அளவில் சாப்பிட்டு தூங்கிவிட்டனர். நேற்று காலையில் துரைசாமியின் வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த மாடுகள் வெகு நேரமாக கத்திக்கொண்டிருந்தன. இதனால் பக்கத்து தோட்டத்து வீட்டை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அங்கு சென்று பார்த்தார்.

அப்போது வீட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே துரைசாமியும், அவருடைய மனைவி துளசிமணியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். துரைசாமி, துளசிமணியின் உடல்கள் அருகே இரும்பு கம்பி கிடந்தது. அவர்கள் 2 பேரின் கழுத்து, தலை, கை, கால் என உடல் முழுவதும் ரத்தகாயம் இருந்தது. எனவே 2 பேரும் மர்மநபர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும் சம்பவ இடத்துக்கு ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வைதேகி வரவழைக்கப்பட்டது. அது பிணம் கிடந்த இடத்தின் அருகே இருந்து வீட்டின் பின்புறம் உள்ள நொய்யல் ஆறு வரை ஓடியது. பின்னர் அங்கிருந்து திரும்பி ஆண்டிக்காடு தோட்டம் செல்லும் வழியில் ஓடியது. அங்கு ஓரிடத்தில் குவிந்து கிடந்த மதுபாட்டில்களை மோப்பம் பிடித்துவிட்டு துரைசாமியின் வீட்டுக்கே திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

இதற்கிடையே கொலை குறித்த தகவல் அறிந்ததும் ராசாம்பாளின் கணவர் எத்திராஜ், சுந்தராம்பாள், அவருடைய கணவர் தங்கவேல் ஆகியோர் வீட்டுக்கு வந்து பிணங்களை பார்த்து கதறி அழுதனர். தகவல் கிடைத்து துரைசாமியின் மகன் வெங்கடாசலமும் கோவிலில் இருந்து வீடு திரும்பினார். இதுதொடர்பாக எத்திராஜுடமும், தங்கவேலிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பிணங்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து சுந்தராம்பாள் சென்னிமலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட துரைசாமிக்கு 20–க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலமும், நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும் உள்ளன. எனவே சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்தததா? அல்லது வேறு ஏதும் காரணமா?, கணவன், மனைவியை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்