திருநின்றவூரில் சாலையில் தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

திருநின்றவூரில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-02-20 20:39 GMT
ஆவடி,

ஆவடி அடுத்த திருநின்றவூர் பேரூராட்சியில் அடங்கிய சி.டி.எச். சாலையில் காந்தி சிலை அருகே மேம்பாலம் கீழே உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கொள்ளாபுரியம்மன் கோவில் தெரு, வத்சலாபுரம், முருகேசன் நகர், நேரு நகர், உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களும், வாடிக்கையாளர்களும், அருகில் உள்ள பஸ்நிலையத்திற்கு வரும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த கழிவு நீர் சி.டி.எச் சாலை வழியாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கி விடுகின்றன.

நோய் பரவும் அபாயம்

இதனால் கொசுக்கள் பெருகி மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற நோய்கள் பரவி பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். காலை நேரத்தில் வேலைக்கு அவசரத்தில் செல்வோர் இந்த கழிவுநீரை கடந்து செல்வதால் அவர்கள் அணியும் ஆடைகள் வீணாகின்றன. இதனால் மீண்டும் வீட்டுக்கு சென்று வேறு உடை மாற்றும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நடவடிக்கை இல்லை

இந்த பகுதியில் சி.டி.எச். சாலையை ஒட்டி உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தியேட்டர், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை முறையாக கழிவு நீர் வாகனம் மூலமாக அகற்றாமல் அடிக்கடி சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் கால்வாயில் திறந்து விடுகின்றனர். அந்த கழிவுநீரானது கருப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசு கிறது.

காந்தி சிலை அருகே கழிவுநீர் சாலையில் ஆறு போல ஓடி தேங்கியுள்ளது. இதனால் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள் மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகிறார்கள். கார், பஸ், ஆட்டோ, லாரி போன்றவை செல்லும்போது அருகில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மீதும், சாலையில் நடந்து செல்வோர் மீதும் கழிவு நீர் படுகிறது.

இதுகுறித்து பலமுறை திருநின்றவூர் பேரூராட்சி செயல்அலுவலரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து பகலிலேயே இந்த கழிவு நீர் இந்த பகுதியில் வெளியேற்றப்படுகிறது. எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்