திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்டம் திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மாலையணிந்து, விரதம் இருந்து, குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள்.
அதுபோல இந்த ஆண்டு மாசி குண்டம் திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கி நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மதியம் குண்டத்து பூஜை, அம்மன் புஷ்பபல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து நள்ளிரவில் சின்ன ஓங்காளியம்மன் கோவில் வாசலில் 51 அடி நீளமுள்ள குண்டம் அமைக்கப்பட்டது. இதில் தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் அம்மனை வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினார்கள். நள்ளிரவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி நேற்று நண்பகல் வரை தொடர்ந்து நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலை பொங்கல் விழா நடக்கிறது. 23-ந் தேதி சின்ன ஓங்காளியம்மன் சாமி புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, வாணவேடிக்கை, தப்பாட்ட நிகழ்ச்சிகளுடன் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சாந்தி முத்துக் குமார், செயல் அலுவலர் சாந்தி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.