வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி, ஊட்டி, கூடலூரில் மவுன ஊர்வலம்
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊட்டி, கூடலூரில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
கூடலூர்,
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி கூடலூரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு(ஜாக்டோ-ஜியோ) சார்பில் காஷ்மீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலமானது கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், சுனில்குமார், அன்பழகன், அருண்குமார், நிர்வாகிகள் ராஜகோபால், நல்லக்குமார், கருணாநிதி, பரமேஷ்வரி, நிர்மலாதேவி, ஆனந்தி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் இரங்கல் கூட்டம் நடை பெற்றது.
மேலும் கூடலூர் சுற்றுலா வாகன டிரைவர்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் முபாரக், மகேந்திரன், ஜெயராஜ், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலமானது கூடலூர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பின்னர் காந்தி திடலில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான டிரைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப் பட்டது.
இதேபோன்று நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடந்தது. இதில் வக்கீல்கள் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காட்டில் வனத்துறையினர் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தாக்குதலில் பலியான வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய பேனருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டது. பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தெப்பக்காடு வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.