திருவண்ணாமலை தி.மு.க. தெற்கு மாவட்ட ஊராட்சி, வட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் எ.வ.வேலு எம்.எல்.ஏ. பங்கேற்பு

திருவண்ணாமலையில் தி.மு.க. தெற்கு மாவட்ட ஊராட்சி, வட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-02-20 21:30 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள், நகராட்சி, பேரூர் வட்ட கழக செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ கலந்துகொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கட்சி பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் எல்லா பகுதிகளிலும் ஊராட்சிசபை கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. அதேபோல் ஊராட்சி சபைக்கூட்டங்கள் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஒன்றிய செயலாளர்களுக்கு மாவட்ட கழகம் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை பற்றி தமிழக அரசு கவலைப்படாமல் இருக்கிறது. எனவே அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டைப்போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், குடிநீர் பிரச்சினையில் மெத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநில அரசை வன்மையாக கண்டிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை மற்றும் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் சி.சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்