வேலூர் ரங்காபுரத்தில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
வேலூர் ரங்காபுரத்தில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி பகுதி 2–ஐ சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 45). இவர் பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரங்காபுரத்தில் போலீஸ் நிலையம் அருகில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார்.
வாடகை இடத்தில் குடோன் வைத்திருந்ததால் கட்டிடமாக இன்றி இரும்புகூரை அமைத்திருந்தார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு ஜெய்சங்கர் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணிவரை கடை திறக்கவில்லை. சுமார் 11.30 மணியளவில் குடோனில் இருந்து புகை வரத்தொடங்கியது. சிறிது நேரத்தில் குடோனில் இருந்த பொருட்களில் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் அதிகளவில் இருந்ததால் குடோன் முழுவதும் தீ மளமளவென பரவியது.
குடோனில் ஏற்பட்ட பயங்கர தீயால் புகைமண்டலம் ஏற்பட்டது. விண்ணை முட்டுவது போன்று புகைமண்டலம் காட்சியளித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து சென்று சர்வீஸ் சாலையில் போக்குவரத்தை தடுத்தனர். தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
குடோன் பூட்டப்பட்டு இருந்ததால் பொதுமக்களால் தீயை அணைக்க முடியவில்லை. தீயணைப்பு வாகனங்கள் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் குடோனுக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ பரவும் நிலை இருந்தது. வீடுகளில் இருந்தவர்களுக்கு புகைமண்டலம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முருகதாஸ், விநாயகம் ஆகியோர் தலைமையில் ஒரு தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் மேலும் 2 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும் குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடோனில் தீ விபத்து ஏற்பட்டதும், அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டனர். மூதாட்டி ஒருவர் மட்டும் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டார். உடனே தீயணைப்பு வீரர்கள் சென்று அவரை வெளியேவருமாறு கூறியும் அவர் வரமறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவரை தீயணைப்பு வீரர்கள் வலுக்கட்டாயமாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.