திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை போலீசார் விசாரணை
திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏ.கே.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி குட்டியம்மாள். சிவக்குமாருக்கும், குட்டியம்மாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
முன்னதாக குட்டியம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த பழனி (35) என்பவருடனும் பழக்கம் இருந்தது. பழனியுடன் குட்டியம்மாள் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு சிவக்குமாருடன் குட்டியம்மாள் பழகி வந்தார்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பழனி சொந்த ஊருக்கு வந்தார். அங்கு குட்டியம்மாளுக்கும் சிவக்குமாருக்கும் கள்ளக்காதல் இருப்பது பழனிக்கு தெரியவந்தது. அதனை பழனி கண்டித்தார். எனினும் குட்டியம்மாள் சிவக்குமாரிடம் தொடர்ந்து பழகி வந்தார்.
நேற்று முன்தினம் குட்டியம்மாளை திருப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதற்கு ரெயிலில் ஏற்றிவிட ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சிவக்குமார் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது ஏ.கே.மோட்டூர் ஏரியில் அவரை மர்ம நபர்கள் வழிமறித்து, கண்ணில் மிளகாய் பொடியை தூவி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ஆத்திரத்தை அடக்க முடியாத மர்ம நபர்கள் சிவக்குமாரின் மர்ம உறுப்பை அறுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் தொடர்பாக பழனி, சிவக்குமாரை கொலை செய்து இருப்பாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பழனியை தேடி வருகின்றனர்.