அரசியல் கட்சி தலைவர்களுக்கு நவீனவசதிகளுடன் தயாராகும் பிரசார வாகனங்கள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சி தலைவர்களுக்காக கோவையில் நவீன வசதிகளுடன் பிரசார வாகனங்கள் தயாராகி வருகிறது.
கோவை,
நாடாளுமன்ற தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் அரசியல் கட்சி தலைவர்கள் ஊர் ஊராக சென்று வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக அதிநவீன வசதி கொண்ட பிரசார வாகனங்கள் கோவையில் தயாராகி வருகின்றனர். கோவை சிவானந்தா காலனியில் உள்ள ‘கோயாஸ்’ நிறுவனம், அதிநவீன வசதிகளை கொண்ட பிரசார வாகனங்களை வடிவமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரியாஸ் கூறியதாவது:-
அரசியல் கட்சிகளின் தலைவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வாகனங்களில் சொகுசு வசதி செய்யப்படும். சுழலும் நாற்காலி, நவீன ஹைட்ரோலிக் கிரேன், படுக்கை, கழிவறை, குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். ஓய்வெடுக்கும் வசதியுள்ள பிரத்யேகமாக வாகனங்களும் தயாராகி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு இன்னும் 10 நாட்களுக்குள் பிரசார வாகனம் தயாராகி விடும்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவரது பழைய வாகனத்தையே பயன்படுத்த உள்ளார். அவ்வாகனத்தின் தரம் பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது. குளுகுளு வசதி கொண்ட இது போன்ற சொகுசு வாகனத்தை வடிவமைக்க 15 முதல் 20 நாட்களாகும். இதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செல வாகும்.
ஏற்கனவே ஆந்திர மாநில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இதுபோன்ற பிரசார வாகனங்களை தயாரித்து கொடுத்து உள்ளோம். எங்களது நிறுவனத்தில் தயாராகும் வாகனங்களில் அரசியல் கட்சி தலை வர்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அசதி ஏற்படாத அளவுக்கு நவீன கருவிகள் பொருத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.