கடம்பத்தூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரெயில்வே மேம்பாலப்பணி

கடம்பத்தூரில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2019-02-19 21:03 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே திருவள்ளூர்-பேரம்பாக்கம் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் தினமும் பேரம்பாக்கம், சத்தரை, புதுமாவிலங்கை, மப்பேடு, கீழச்சேரி, சிற்றம்பாக்கம், களாம்பாக்கம் போன்ற சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்லமுடியாமல் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள்.

இதற்கு நிரந்தர தீர்வாக கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள், ரெயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு கடம்பத்தூரில் ரூ.14 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பணிகள் தாமதம்

இதில் நெடுஞ்சாலை பகுதியில் 25 தூண்களும், ரெயில்வே பகுதியில் 4 தூண்களும் என மொத்தம் 29 தூண்களுடன் 2 ஆண்டுகளில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை பகுதியில் 22 தூண்கள் அமைக்கப்பட்டன. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பணிகள் தொடங்காமல் கடந்த 1½ ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரெயில்வே மேம்பாலப்பணிக்காக அந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகையை வழங்கினார்கள். தற்போது கடம்பத்தூர் ரெயில் நிலையத்தின் இருபுறங்களிலும் மேம்பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆனால் ரெயில் தண்டவாளங்களுக்கு இடையே தூண்கள் அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

இதனால் தினந்தோறும் இந்த வழியாக செல்லும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அவதியுற்றபடி சென்று வருகின்றனர். எனவே கடம்பத்தூரில் ஆமை வேகத்தில் நடந்து வரும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து இடித்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது:-

3 மாதங்களில் பணிகள் நிறைவு

கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை சார்பில் ரெயில்வே கேட்டின் 2 பக்கங்களிலும் மேம்பாலப்பணிகள் விரைந்து முடிக்க திட்டமிட்டு அதில் தற்போது 90 சதவீத பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.மேலும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

தற்போது தண்டவாளங்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கும் பணியை ரெயில்வே நிர்வாகம் செய்து வருகிறார்கள். இப்பணிகள் முடிக்கப்பட்ட உடன் இன்னும் 3 மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்