ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 18 கடைகளுக்கு ‘சீல்’
ஊட்டி நகராட்சியில் வாடகை செலுத்தாத 18 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் 1,307 கடைகள் இயங்கி வருகின்றன. எட்டின்ஸ் சாலை, பழைய அக்ரஹார தெரு, புளுமவுண்டன் சாலை, பிங்கர்போஸ்ட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகராட்சி வணிக வளாகங்களில் கடைகள் செயல்பட்டு வருகிறது. வணிக வளாகங்கள் மற்றும் நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.2½ கோடி வருமானம் கிடைத்தது.
கடந்த 2016-ம் ஆண்டு நகராட்சி கமிஷனர் சத்தார் நகராட்சியில் அடிப்படை பணிகள், மேம்பாடுகள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க போதிய நிதி இல்லாததால் தனிக்குழு அமைத்து கடைகளை அளவீடு செய்து வாடகையை உயர்த்தினார். இந்த வாடகை உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வாடகை தொகையும், வைப்புத்தொகையாக ரூ.10 கோடியும் என மொத்தம் ரூ.22 கோடி நகராட்சிக்கு வருமானமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதைய நகராட்சி மன்றம் வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு தீர்மானம் அனுப்பியது. தமிழக அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனை தொடர்ந்து நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர்த்தப்பட்ட வாடகை தொகையை கட்ட இயலாது, வாடகையை குறைக்க வேண்டும் என்று நகராட்சியிடம் மனு அளித்தனர். இருப்பினும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன் காரணமாக மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஊட்டி நகராட்சி கடைகளுக்கு வாடகையை நிர்ணயம் செய்ய நகராட்சி நிர்வாகம் குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், மண்டல நிர்வாக பொறியாளர் கண்காணிப்பில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, குழுவினர் நகராட்சி கடைகளில் அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர். இது சம்பந்தமான அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்பகுதியில் 10 கடை உரிமையாளர்கள் பழைய வாடகை செலுத்தவில்லை. இந்த கடைகளுக்கு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் வாடகை தொகை பாக்கி உள்ளது. மேலும் எட்டின்ஸ் சாலை, சேரிங்கிராஸ், சத்திரக்கூடம், காபிஹவுஸ் அருகே உள்ள வணிக வளாகங்களில் 8 கடைகளின் உரிமையாளர்கள் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் வாடகை தொகை செலுத்த வேண்டி உள்ளது. மொத்தம் 18 கடைகள் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் வாடகை தொகை நகராட்சிக்கு பாக்கி வைத்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று நகராட்சி கமிஷனர் நாராயணன் உத்தரவின்படி வருவாய்த்துறை அலுவலர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் வாடகை செலுத்தாத 18 கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தொடர்ந்து ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான வாடகை செலுத்தாத கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படுவது தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.