மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி பணிகளுக்கு 3,300 பேர் விண்ணப்பம்

மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 363 அங்கன்வாடி பணியிடங்களுக்கு 3,300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2019-02-19 22:45 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்கள், குறு அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள், உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. அதன்படி மாவட்டத்தில் 156 அங்கன்வாடி பணியாளர்கள், 6 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 201 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடம் என மொத்தம் 363 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் 12-ந்தேதி முதல் மாவட்டத்தில் 6 இடங்களில் பெறப்பட்டு வந்தது. தினமும் ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே பெறப்பட்டன. விண்ணப்பம் பெறப்பட்டவுடன் உடனுக்குடன் நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு கடிதமும் வழங்கப்பட்டது.

விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் ஆகும். ஆர்வமுடன் பலர் நேற்றும் விண்ணப்பித்தனர். 363 காலிப் பணியிடங்களுக்கு, 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களுக்காக மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

நேர்முகத் தேர்வு நடத்தி தகுதியான நபர்களுக்கு பணி வழங்க கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரடி மேற்பார்வையில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பணி நியமன உத்தரவு தயார் செய்து, இரவோடு, இரவாக பயனாளிகளுக்கு வீடு தேடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், இந்த ஆண்டும் முறைகேடுகளுக்கு வழிவகுக்காத வகையில் தேர்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்