நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் கலெக்டரிடம் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மனு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம், ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாநகர தலைவர் செஞ்சோலை சேகர் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்வது நமது கடைமையாகும். அதுபோலவே வாக்களிக்க தகுதியுள்ள மக்கள் வாக்களித்து மக்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் மின்னணு வாக்கு எந்திரத்தின் மீது சந்தேகம் ஏற்படும் வகையில் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நமது நாட்டில் உள்ள மக்களின் கல்வி அறிவு, பொது அறிவு மற்றும் நடைமுறையை கருத்தில் கொண்டு மின்னணு வாக்கு எந்திரத்தை வருகிற தேர்தல்களில் தவிர்க்க வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாக்குச்சீட்டையே தேர்தல்களில் பயன்படுத்துகின்றனர். எனவே வருகிற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்கும் முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
காஷ்மீரை மீட்க...
இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநில தகவல் தொடர்பாளர் ஹரிகரன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் “காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது கார்களில் வெடிகுண்டுகளை நிரப்பி தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதற்கு காரணமான பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் மீது போர் தொடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க வேண்டும். நாடு முழுக்க இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனு கொடுக்க வந்த போது பலியான ராணுவ வீரர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி வந்தனர்.
வீட்டுமனை பட்டா
இதுபோல் பல்லடம் அறிவொளிநகரை சேர்ந்த நரிக்குறவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் “பல்லடம் அறிவொளிநகரில் கடந்த 23 ஆண்டுகளாக அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகிறோம். 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த பகுதியில் இருக்கிறோம். எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசின் அனைத்து கார்டுகளும் உள்ளது. ஆனால் அரசு வழங்கிய இடத்திற்கு இதுவரை வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை.
பட்டா இருந்தால் தான் வங்கி உள்ளிட்ட கடன்கள் பெற முடியும். பட்ட வழங்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் மாவட்ட கலெக்டர் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இதுபோல் மேற்கு பல்லடம், காங்கேயம் ரோடு காயிதேமில்லத்நகர், மங்கலம் நால்ரோடு, பெருமாநல்லூர் பொங்குபாளையம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரும் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.