திருப்பூரில் வாக்காளர் உதவி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருப்பூரில் வாக்காளர் உதவி மையத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திடீரென ஆய்வு செய்தார்.
திருப்பூர்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், கோரிக்கைகள், கருத்துகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றை தெரிவிப்பதற்காகவும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கட்டணமில்லா தொலைபேசி சேவையான வாக்காளர் உதவி எண்-1950 வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மையத்தை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் உதவி மையம் தொடங்கப்பட்ட நாளான கடந்த மாதம் 25-ந் தேதி முதல் இதுவரை கட்டணமில்லா தொலைபேசி சேவையை எத்தனை பேர் தொடர்பு கொண்டுள்ளனர், அதற்கு அளிக்கப்பட்ட பதில் விவரங்களை கலெக்டர் கேட்டறிந்தார். இதில் மொத்தம் 819 அழைப்புகள் வரப்பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டு உரிய பதிலை சரியாக தெரிவிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால், வாக்காளர் உதவி மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தேர்தல் தனி தாசில்தார் முருகதாஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.