2-வது முறையாக லஞ்சம் வாங்கி சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் கமிஷனர் அதிரடி நடவடிக்கை
2-வது முறையாக லஞ்சம் வாங்கி சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்து, மும்பை போலீஸ்கமிஷனர் சுபோத் ஜெய்ஸ்வால் உத்தரவிட்டு உள்ளார்.
மும்பை,
மும்பை தேவ்னாரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தத்தாரே கோவிந்த் சவுத்ரி(வயது50). இவர் கடந்த புதன்கிழமை ஆசிரியர் ஒருவரிடம் ரூ.80 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக பிடிபட்டார். ஆசிரியர் மற்றும் 2 பேருக்கு ஜாமீன் கிடைக்க சாதகமாக செயல்படுவதாக கூறி, அவர் லஞ்ச பணத்தை வாங்கியிருந்தார்.
இன்ஸ்பெக்டர் தத்தாரே கோவிந்த் சவுத்ரி ஏற்கனவே 2002-ம் ஆண்டு ஜாமீன் கிடைக்க உதவி செய்வதாக கூறி, ஒருவரிடம் ரூ.8 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கி சிக்கியவர் ஆவார். ஆனால் சாட்சி பல்டி அடித்ததால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்
இந்தநிலையில் 2-வது முறையாக லஞ்சம் வாங்கி சிக்கிய இன்ஸ்பெக்டர் தத்தாரே கோவிந்த் சவுத்ரியை பணிநீக்கம் செய்து மும்பை போலீஸ் கமிஷனர் சுபோத் ஜெய்ஸ்வால் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இன்ஸ்பெக்டர் தத்தாரே கோவிந்த் சவுத்ரியின் ஒழுக்கமற்ற மற்றும் பொறுப்பற்ற செயல் போலீஸ் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த தகவலை போலீஸ் இணை கமிஷனர் தேவன் பாரதி உறுதிபடுத்தி உள்ளார்.