நள்ளிரவு போலீசார் வேட்டை மணல் கடத்த முயன்ற 10 பேர் கைது; 4 பேர் தப்பி ஓட்டம் 7 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி அருகே நள்ளிரவு போலீசார் நடத்திய வேட்டையில் மணல் கடத்த முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2019-02-18 23:00 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி அண்ணாசிலை பகுதியை சேர்ந்த சாகுல்அமீது என்பவருக்கு நெ.1 டோல்கேட்டை அடுத்து தாளக்குடி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் 2 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் குறிப்பிட்டஅடி ஆழத்திற்கு கீழ்பகுதியில் மணல் பரப்பு காணப்படுகிறது. இந்த மணலை திருச்சி பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் ஆதரவுடன் சிலர் இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் தோண்டி டிப்பர் லாரிகளில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்து அதிக பணம் சம்பாதித்து வருவதாக கொள்ளிடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 14 பேர் 2 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி கடத்த முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களில் 10 பேர் பிடிபட்டனர். 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

இதனையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 3 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 10 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ஸ்ரீரங்கம் அருகே உள்ள அதவத்தூரை சேர்ந்த சக்திவேல் (வயது 25), சுரேஷ் (22), மேலத்தெருவை சேர்ந்த முத்துக்குமார்(42), புதுக்கோட்டை மாவட்டம், நரிமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ்(31), வசந்தபுரி நகரை சேர்ந்த விஜயகுமார் (30), லால்குடி அருகே உள்ள கல்லக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி (23), திருமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (31), திருநெல்வேலி மாவட்டம், குறிச்சிகுளம் தெற்குத்தெருவை சேர்ந்த பார்த்திபன் (24), ஆர்யபிரகாஷ் (25), மணப்பாறை அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த அறிவழகன் (26) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 4 நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ள திருவளர்ச்சோலை அருகே உள்ள பொன்னுரங்கபுரத்தை சேர்ந்த கண்ணன், உறையூர் பகுதி பாத்திமா நகரை சேர்ந்த சந்திரசேகர், லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்த செல்வம், அப்பாத்துரை கிராமத்தை சேர்ந்த மோகன் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்