கலபுரகி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் பிரதமர் மோடி அடுத்த மாதம் 1-ந் தேதி கர்நாடகம் வருகை

அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி பிரதமர் மோடி கர்நாடகம் வருகிறார். கலபுரகியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

Update: 2019-02-18 21:40 GMT
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நிர்வாகிகள் கூட்டம்

வருகிற 21-ந் தேதி துமகூரு, சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய இடங்களில் பா.ஜனதா மாநாடுகள் நடக்கின்றன. இதில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார். அதே போல் வருகிற 22-ந் தேதி பீதர் மாவட்டம் உம்னாபாத், கலபுரகி, பீதர் ஆகிய நகரங்களில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய மந்திரி புருஷோத்தம் கலந்து கொள்கிறார். அன்று மாலை 4 மணிக்கு கட்சியின் கூட்டம் நடக்கிறது.

23-ந் தேதி விஜயாப்புரா, பாகல்கோட்டை நாடாளுமன்ற தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.

மத்திய அரசின் சாதனைகள்

வருகிற 24-ந் தேதி மாநிலம் முழுவதும் 75 லட்சம் வீடுகளுக்கு நேரில் சென்று கட்சி கொடி, சின்னம், மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும். 25-ந் தேதி மோடி சங்கல்ப என்ற பெயரில் கட்சி கூட்டம் நடக்கிறது.

26-ந் தேதி மத்திய அரசின் திட்ட பயனாளிகள் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் ஒன்று சேர்ந்து கோலம் போட்டு மகிழ்கிறார்கள். 28-ந் தேதி கதக்கில் சங்கல்ப யாத்திரை நடக்கிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி, பூத் மட்டத்திலான நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறார்.

பிரதமர் மோடி

மார்ச் மாதம் 1-ந் தேதி கலபுரகியில் பிரதமர் மோடி பங்கேற்கும் கட்சி பொதுக்கூட்டம் நடக்கிறது. மார்ச் 2-ந் தேதி துமகூருவில் விஜய சங்கல்ப கூட்டம் நடக்கிறது.

3-ந் தேதி சித்ரதுர்கா, தாவணகெரே, 4-ந் தேதி ஹாவேரி, உத்தர கன்னடா, 5-ந் தேதி சிக்கோடி, பெலகாவி, 6-ந் தேதி தார்வார், 7-ந் தேதி கொப்பல், பல்லாரி, 8-ந் தேதி பெங்களூரு வடக்கு, 9-ந் தேதி பெங்களூரு மத்திய, 10-ந் தேதி பெங்களூரு தெற்கு, 11-ந் தேதி பெங்களூரு புறநகர், 12-ந் தேதி கோலார், 13-ந் தேதி சிவமொக்கா, 14-ந் தேதி உடுப்பி, 15-ந் தேதி மங்களூரு, 16-ந் தேதி குடகு, 17-ந் தேதி சாம்ராஜ்நகர் மற்றும் மைசூரு, 18-ந் தேதி மண்டியா, ஹாசன், 19-ந் தேதி சிக்கமகளூரு ஆகிய இடங்களில் விஜய சங்கல்ப என்ற பெயரில் கட்சி கூட்டங்கள் நடக்கின்றன.

22 தொகுதிகளில் வெற்றி

கர்நாடகத்தில் பா.ஜனதா குறைந்தது 22 தொகுதிகளில் வெற்றி பெறும். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் மோடி அலை மூலம் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்