ஹாவேரியில் நகரசபை பெண் கவுன்சிலர் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது

ஹாவேரியில் நகரசபை பெண் கவுன்சிலர் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் 8 பேர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். மேலும் வீட்டின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.

Update: 2019-02-18 21:23 GMT
ஹாவேரி,

ஹாவேரி மாவட்டம் பேடகி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜூலிகபி குர்கட்லி. நகரசபை பெண் கவுன்சிலர். இவர் தனது வீட்டில் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக கியாஸ் அறை முழுவதும் பரவி இருந்தது.

இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மேலும் மேற்கூரை இடிந்து விழுந்ததுடன் வீட்டிலும் தீப்பிடித்தது.

இதில் ஜூலிகபி குர்கட்லி, அவரது கணவர் அல்லாசாப், மகன்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

3 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்

இதுபற்றி அறிந்தபேடகி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அப்பகுதி மக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த 8 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேடகி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்