தகராறில் தம்பி மனைவியின் காதை கடித்து துப்பிய விவசாயிக்கு வலைவீச்சு

ஆண்டிப்பட்டி அருகே, தகராறில் தம்பி மனைவியின் காதை கடித்து துப்பிய விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-18 22:30 GMT
கண்டமனூர்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுதா (வயது 25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு கணவரை விட்டு பிரிந்து சுதா வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விஸ்வநாதன் பெருமாள்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்போன் மூலம் மனைவி சுதாவுக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனே அவர் பெருமாள்பட்டிக்கு வந்து விஸ்வநாதனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது விஸ்வநாதனின் அண்ணன் அம்மாபட்டியை சேர்ந்த விவசாயி வைரம் (38) என்பவர் அங்கு வந்தார்.

விஸ்வநாதனிடம் சுதா பேசிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். சுதாவுக்கும், வைரத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் சுதாவின் ஒரு காதை கடித்து துப்பினார். அவருடைய காது துண்டாகி விழுந்தது. உடனே அங்கு இருந்து வைரம் தப்பியோடி விட்டார். சுதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு துண்டான காதை சேர்த்து வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த ராஜதானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சுதா கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வைரத்தை வலைவீசி தேடி வருகின்றனர். தம்பி மனைவியின் காதை அண்ணன் கடித்து துப்பிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்