திருச்செங்கோடு அருகே 2 மகள்களுடன் விஷம் குடித்த தாய் சாவு ஆபத்தான நிலையில் 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்செங்கோடு அருகே, 2 மகள்களுடன் விஷம் குடித்த தாய் இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த 2 மகள்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2019-02-18 21:30 GMT
எலச்சிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர்குத்திபாளையம் சொட்டைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50). இவரது மனைவி தமிழ்செல்வி (42). இவர்களுக்கு தேவி (15), சுபா (13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் முறையே திருச்செங்கோடு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை தமிழ்செல்வி விஷம் குடித்து விட்டு தனது மகள்கள் இருவருக்கும் கொடுத்துள்ளார். பின்னர் அவர்களது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தமிழ்செல்வி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

ஆபத்தான நிலையில் உள்ள சுபாவுக்கு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல தேவி மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ராமசாமி கொடுத்த புகாரின்பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ராமசாமிக்கும், இவர்களது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சுப்பையன் (55), இவரது மகன் செந்தில் (35) ஆகியோருக்கும் பாதை தகராறு இருந்ததும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தந்தையும், மகனும், தமிழ்செல்வியையும், அவரது குடும்பத்தையும் திட்டியதும், இதில் மனம் உடைந்த தமிழ்செல்வி, மகள்களுடன் விஷம் குடித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்