டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-18 22:00 GMT
கிருஷ்ணகிரி,

மத்தூர் ஒன்றியம் கே.எட்டிப்பட்டி ஊராட்சி கூனம்பட்டி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வேலாயுதம் தலைமையில் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர், 2011-12-ம் நிதியாண்டில் முதல்-அமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் இலவச வீட்டினை பெற்று கட்டி முடித்தார். அவர் ஏழ்மையான வாழ்வாதாரத்தினை கொண்டவர் என்ற அடிப்படையில் நான் தலைவராக இருந்த காலத்தில் தேர்வு செய்து வழங்கப்பட்டது.

தற்போது அந்த வீட்டினை டாஸ்மாக் கடை நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். அவர் குடியிருக்கவே இந்த இலவச வீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது முறைகேடாக தனது வீட்டினை டாஸ்மாக் கடை நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். அந்த பகுதியில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கோவிலுக்கு செல்லும் பெண்கள் என எப்போதும் ஆட்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது.

இந்த நிலையில் இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கும் குடிமகன்கள், அங்கேயே குடித்துவிட்டு, ஆபாசமாக பேசுவதும், கலாட்டா செய்வதுமாக உள்ளனர். இதனால் பெண்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் அந்த வழியில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே, உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை அகற்றுவதுடன், பசுமை வீட்டை வாடகைக்கு விட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தொடர்ந்து கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற 5 பேரை தவிர மற்றவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்புறமாக உள்ள சாலையில் அமர்ந்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசிய கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்