போலி சாவி மூலம் வீட்டின் கதவை திறந்து 43 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கிருஷ்ணகிரியில், போலி சாவி மூலமாக வீட்டின் கதவை திறந்து 43 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-18 22:00 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அருகே உள்ள கங்கலேரி பக்கமுள்ள பூதிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மனைவி சம்சுனிஷா (வயது 60). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் இவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் முன்புறமாக உள்ள கதவின் பூட்டை போலி சாவி மூலமாக திறந்து உள்ளே நுழைந்தனர்.

இதைத் தொடர்ந்து வீட்டில் பீரோவை திறந்து உள்ளே வைத்திருந்த 43 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய சம்சுனிஷா வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 43 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதே போல கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்