திருவெண்ணெய்நல்லூர் அருகே, நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே நகைக்காக மூதாட்டியை மதுபோதையில் வாலிபர் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

Update: 2019-02-18 22:30 GMT
அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆலங்குப்பம் மெயின்ரோட்டில் வசித்து வந்தவர் மகாலிங்கம் மனைவி அஞ்சலை (வயது 70). மகாலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதால் அஞ்சலை தனது மகளான நாவம்மாள் வீட்டின் அருகில் ஒரு ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அஞ்சலை தனது வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 12.45 மணியளவில் அஞ்சலையின் மருமகன் முனியன் தூக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போது அஞ்சலையின் வீட்டில் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த முனியன், ஏன் இந்த நேரத்தில் மின்விளக்கு எரிகிறது என்று பார்ப்பதற்காக அஞ்சலையின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது, அந்த வீட்டின் உள்ளே இருந்து ஒரு வாலிபர் வெளியே ஓடி வந்தார். இதில் சந்தேகமடைந்த முனியன், அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் முனியன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு மணிமேகலை கழுத்தில் ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த ½ பவுன் மூக்குத்தி, தோடு ஆகியவை காணாமல் போய் இருந்ததுடன், சேலை கலைந்த நிலையில் இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முனியன், உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அஞ்சலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் எதிரே மோட்டார் சைக்கிளுடன் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

அதில், அவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் கவிதாஸ் (24) என்பது தெரிந்தது. மேலும் மதுபோதையில், அஞ்சலை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த அஞ்சலையை மூதாட்டி என்றுகூட பாராமல் மதுபோதையில் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதில் அஞ்சலை கூச்சல் போடவே ஆத்திரமடைந்த கவிதாஸ், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அஞ்சலையின் கழுத்தில் கீறியுள்ளார். அதன் பிறகும் அவர் உயிரோடு இருந்ததால் புடவையால் கழுத்தை நெரித்துக்கொன்றார். பின்னர் அவர் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கவிதாசை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூதாட்டியை கொன்றுவிட்டு நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்