மத்திகிரி கால்நடை பண்ணை வளாகத்தில் 2 மாடுகள் செத்தன மின்சாரம் தாக்கி இறந்ததா? அதிகாரிகள் விசாரணை
மத்திகிரி கால்நடை பண்ணை வளாகத்தில் 2 மாடுகள் செத்தன. அவைகள் மின்சாரம் தாக்கி இறந்ததா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில், அரசு கால்நடை பண்ணை வளாகம் உள்ளது. இதனை ஒட்டி மாவட்ட வனத்துறை அலுவலக நுழைவு வாயில் பகுதியில், தண்ணீர் கேட்வால்வு உள்ளது. இதில் நிரம்பும் தண்ணீர், அருகில் உள்ள கால்நடை பண்ணை வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை சுற்றி தேங்குகிறது. இதன் காரணமாக மின்கம்பத்தில் இருந்து வரும் மின்சாரம் தண்ணீரில் பாய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, மத்திகிரி அருகே சிப்பாய்பாளையம் பகுதியை சேர்ந்த பிரதோஷ் என்ற விவசாயியின் காளை மாடு கால்நடை பண்ணை வளாகத்தில், மின்கம்பத்தை சுற்றியுள்ள தண்ணீரை குடிக்க சென்றதாக தெரிகிறது.
அப்போது திடீரென மாடு சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. அதேபோல், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ஹாஜிரா என்பவரின் பசுமாடும் அப்பகுதியில் தண்ணீர் குடிக்க சென்ற போது சுருண்டு விழுந்து செத்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இந்த 2 மாடுகளும் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்பேரில் மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்ததா? என்பது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.