‘‘நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்’’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2019-02-17 23:30 GMT

மதுரை,

மதுரை ஒத்தக்கடையில் பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைசவுந்தரராஜன் பங்கேற்று பேசியதாவது:–

வருகிற 22–ந்தேதி மதுரைக்கு பா.ஜ.க.வின் அகில பாரத தலைவர் அமித்ஷா வருகிறார். பிரியங்கா அரசியலுக்கு வந்துவிட்டார் என பலர் பா.ஜ.க.வை பயமுறுத்துகிறார்கள். ஆயிரம் பிரியங்கா வந்தாலும் நாங்கள் பயப்படமாட்டோம். மத்தியிலும் காவி கொடி. மாநிலத்திலும் காவி கொடியின் வெற்றி உறுதி.

மோடி தமிழகத்துக்கு வந்து சென்ற பின், தமிழகத்தில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. தமிழக காங்கிரசின் புதிய தலைவராக அழகிரி பொறுப்பேற்ற உடன் கமலை கூட்டணிக்கு அழைத்து அறிக்கை வெளியிட்டார். ஸ்டாலின் மிரட்டல் விடுத்ததால், அடுத்த நாள் அவசர அவசரமாக கமலை எதிர்த்து அறிக்கைவிட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

ரஜினி தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க. பற்றி அவர் எந்த கருத்தும் கூறவில்லை. தற்போது தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பா.ஜ.க. தலைமையிலான அரசு தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஜினி ஏற்கனவே கூறியதுபோல, பலர் எதிர்ப்பதால் தான் மோடி பலசாலியாக உள்ளார். ரஜினி ரசிகர்கள் அரசியல் தெரிந்தவர்கள்.

எனவே யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன், பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் பலமான கூட்டணி அமையும். அது தமிழர்கள் பெருமைப்படும் வகையில் இருக்கும். ஊராட்சி சபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறார். அவரது நாடகம், மக்களிடம் எடுபடாது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்