கூடலூரில், பூத்து குலுங்கும் காபி செடிகள்
கூடலூரில் காபி செடிகள் பூத்து குலுங்குகின்றன.
கூடலூர்,
நடப்பு ஆண்டில் நீலகிரியில் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இது தவிர தேயிலை செடிகளில் மகசூல் குறைந்துவிட்டது.
இந்த நிலையில் கூடலூர், வயநாடு பகுதியில் அராபிக்கா, ரொபஸ்டா ஆகிய 2 வகையான காபி பயிர்கள் விளைகிறது. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் காபி பயிர் அறுவடை சீசன் காலமாக விளங்குகிறது. இதனால் காபி காய்கள் பறிக்கும் பணியில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அறுவடைக்கு முன்பே கூடலூர் பகுதியில் காபி செடிகள் பூத்தன. இந்த சமயத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே பிஞ்சு ஆக மாறும். இல்லையெனில் கருகி விடும் என்று விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.
ஆனால் கோடை மழை பெய்ய தாமதம் ஆனது. இதனால் காபி செடிகளில் பூக்கள் கருகியது. மேலும் விளைந்த காய்களை பறிக்கும்போது பெரும்பாலானவை உதிர்ந்தன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். இருப்பினும் விளைந்த காய்களை பறித்து உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் கூடலூர் பகுதியில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதனால் கூடலூர் கெவிப்பாரா, செம்பக்கொல்லி, மச்சிக்கொல்லி, தேவர்சோலை, பாடந்தொரை, புத்தூர்வயல், முதுமலை, மண்வயல் உள்ளிட்ட பகுதியில் காபி செடிகள் மீண்டும் பூத்து குலுங்குகிறது. இதனால் காபி தோட்டங்கள் முழுவதும் பூக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, நடப்பு ஆண்டில் முன்கூட்டியே கடந்த மாதம் காபி செடிகள் பூத்தன. மழை பெய்யாததால் அனைத்து பூக்களும் கருகி விட்டன. தற்போது அறுவடை சீசன் முடியும் தருவாயில் சாரல் மழை பரவலாக பெய்துள்ளதால், மீண்டும் காபி செடிகள் பூத்துள்ளன. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.