தாசம்பட்டி வனப்பகுதியில் கடும் வறட்சி: தொட்டியில் தண்ணீர் குடிக்க வரும் யானைகள் கூட்டம்

தாசம்பட்டி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தொட்டியில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம், கூட்டமாக வருகின்றன.

Update: 2019-02-17 23:00 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, ஒகேனக்கல் வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் இந்த பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க ஒகேனக்கல், பேவனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆங்காங்கே தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தொட்டியில் வனப்பகுதிகளில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் தண்ணீர் குடித்து செல்கின்றன.

இந்தநிலையில் பாலக்கோடு வனச்சரகத்திற்குட்பட்ட தாசம்பட்டி வனப்பகுதியில் வனத்துறை சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து சூரியசக்தி மூலம் தண்ணீர் எடுத்து 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து இந்த தொட்டியில் தண்ணீர் குடித்து செல்கின்றன. இந்த யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ஒகேனக்கல், பாலக்கோடு வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்ந்து தண்ணீர் நிரப்பவும், யானைகளுக்கு உணவாக கரும்பு சோகை, தென்னை ஓலைகள் போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினர்.

மேலும் செய்திகள்