நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் சகாயம் ஐ.ஏ.எஸ். பேட்டி

பெரம்பலூரில் மக்கள் பாதை இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் நேற்று நடந்தது.

Update: 2019-02-16 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் மக்கள் பாதை இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மக்கள் பாதை இயக்கத்தின் நிறுவனர் சகாயம் ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் சமூக மாற்றத்தை நேர்மையான இளைஞர்கள் முன்னெடுக்க அனைவரும் ஒரு அணியில் சேர வேண்டும். நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், உழவர்களையும் காப்பாற்றவும், ஊழலை அகற்றவும் இளைஞர்கள் முன்வரவேண்டும்.

ஆகையால் இளைஞர்கள், விவசாயிகள் அனைவரும் சேர்ந்து மக்கள் பாதை அமைப்பில் பயணிக்கவேண்டும். லஞ்சம் தருவது, பெறுவது இரண்டுமே ஊழலுக்கு வழிவகுக்கும். ஆகையால் இன்றைய இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் லஞ்சம் தருவதையும், பெறுவதையும் அடியோடு நிறுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் 100 சதவீதம் தங்களது வாக்கை பதிவு செய்யவேண்டும். யாரிடத்திலும், எந்த அரசியல் கட்சியினரிடமும் பணம், பரிசு, பெற்றுக்கொண்டு ஒருபோதும் வாங்கிக்கொண்டு வாக்களிக்க கூடாது.

மக்கள் பாதை இயக்கத்தினர், வருகிற தேர்தலில் நேர்மையான, பொதுநலமிக்க வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தலின் மூலம் அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த சமூகத்தில் மகத்தான மாற்றங்களை உருவாக்குவதே மக்கள் பாதை இயக்கத்தின் நோக்கமாகும். தமிழ்நாட்டில் கிரானைட் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது என அறிக்கை சமர்பித்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

இந்த கூட்டத்தில் தன்னார்வலர்கள் நவநீதிகிருஷ்ணன், ரமேஷ்கருப்பையா, மகாதேவன், வரதராஜன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்