பெருந்துறையில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி பார்வையிட்டு ஆய்வு
பெருந்துறையில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருந்துறை,
பெருந்துறை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ரூ.55 கோடி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதற்கான பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இதற்காக பணிக்கம்பாளையம் பகுதியில் பெருந்துறை பேரூராட்சி குப்பை கிடங்கு அருகில் 32 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்துக்கான கழிவுநீர் உந்து நிலையம் அய்யர்குளம், சென்னிவலசு, பணிக்கம்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் 36 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சங்கர் நேற்று பெருந்துறைக்கு வந்து பாதாள சாக்கடை திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பணிக்கம்பாளையத்துக்கு சென்று அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வை சந்தித்தார். அப்போது மேலாண்மை இயக்குனர் சங்கரிடம் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘பெருந்துறை பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும். அப்போது தான் இந்த திட்டம் முழுமைஅடையும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும்,’ என்று கேட்டுக்கொண்டார்.