கவர்னரின் செயல்பாடு மக்களை அவமதிக்கும் விதமாக உள்ளது அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு

கவர்னரின் செயல்பாடு மக்களை அவமதிக்கும் விதமாக உள்ளது என்று அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

Update: 2019-02-15 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தலைவர் சேஷாச்சலம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். மக்களின் பிரதிநிதிகளாக உள்ள ஆட்சியாளர்களாகிய புதுவை அமைச்சரவைதான் மக்களை ஆளும் அதிகாரம் மிக்கவர்களாக இருக்கவேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக யூனியன் பிரதேச சட்டமானது ஜனாதிபதியின் பிரதிநிதியாக உள்ள கவர்னருக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.

அதேநேரத்தில்அந்த சட்டமானது புதுவை அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் உதவியோடுதான் கவர்னர் புதுவையை நிர்வாகம் செய்யவேண்டும் என்றும் கூறுகிறது. எனவே அமைச்சரவையின் ஒத்துழைப்போடு மக்கள் நலத்திட்டங்கள் புதுவையில் அமல்படுத்தப்பட வேண்டும். அதற்கு கவர்னர் இசைவாக செயல்பட வேண்டும் என்று புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

புதுவையின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் முதல்–அமைச்சர் தலைமையில் போராட்டம் நடத்தும்போது அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் டெல்லி சென்ற கவர்னரின் செயல் ஒட்டுமொத்த புதுவை மக்களை அவமதிக்கும் செயல். இது மிகவும் வருத்தத்தக்கதாகும். மக்கள் நலத்திட்டங்களுக்காக முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் நடத்தும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சேஷாச்சலம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்