மோட்டார்சைக்கிள்–லாரி மோதல்: தறித்தொழிலாளி பரிதாப சாவு; நண்பர் படுகாயம்
மோட்டார்சைக்கிள்–லாரி மோதிக்கொண்ட விபத்தில் தறித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
அந்தியூர்,
நாமக்கல் மாவட்டம் கொமராபாளையம் அருகே உள்ள சடையம்பாளையத்தை சேர்ந்தவர் சூசாரத்னம் (வயது 45). இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (54). இருவரும் கைத்தறி தொழிலாளர்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தில் நடைபெறும் திருமணத்தில் கலந்துகொள்ள நேற்று காலை சூசாரத்னமும், செல்வராஜூம் மோட்டார்சைக்கிளில் சென்றார்கள். திருமணம் முடிந்ததும் இருவரும் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார்கள்.
தவுட்டுப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, ஒரு திருப்பத்தில் மோட்டார்சைக்கிளும், எதிரே வந்த ஒரு லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோட்டார்சைக்கிளில் இருந்து சூசாரத்னமும், செல்வராஜூம் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள்.
இதில் சம்பவ இடத்திலேயே சூசாரத்னம் இறந்துவிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து செல்வராஜை மீட்டு ஆம்புலன்சில் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும், அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த சூசாரத்னத்துக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த சூசாரத்னத்தின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.