தாரமங்கலம் அருகே காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவி வீட்டு முன்பு தற்கொலை செய்வதாக மிரட்டியவர் கைது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றதால் பரபரப்பு
தாரமங்கலம் அருகே கல்லூரி மாணவி வீட்டு முன்பு தற்கொலை செய்வதாக மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். அவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி கொண்டு தீ வைத்து கொள்ள முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாரமங்கலம்,
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 25). இவர் திருவிழா காலங்களில் ஊர், ஊராக சென்று பேன்சி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு தாரமங்கலம் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக அங்கு சென்று பேன்சி கடை வைத்திருந்தார்.
இதற்காக அங்குள்ள உறவினர் ஒருவரது வீட்டில் 5 நாட்கள் தங்கி இருந்தார். அப்போது உறவினர் வீட்டின் எதிரே வசித்து வந்த ஒரு கல்லூரி மாணவியை பார்த்தவுடன் அவர் காதல் வயப்பட்டார். உடனே உறவினர் பெண் மூலமாக அந்த பெண்ணின் புகைப்படத்தை நைசாக வாங்கினார்.
பின்னர் அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு தான் வாங்கிய அவரது புகைப்படத்தையே அனுப்பி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். கடந்த சில மாதங்களாக தன்னை காதலிக்கும்படி அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்து உள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காதலர் தினம் என்பதால் ரவி தனது காதலை எப்படியாவது காதலியிடம் தெரிவித்து சம்மதம் பெற்று விட நினைத்தார். இதற்காக நேற்று முன்தினம் மாலை அவர் தாரமங்கலம் வந்தார். பின்னர் தான் காதலிக்கும் கல்லூரி மாணவியின் வீட்டின் முன்பு நின்று கொண்டு காதலியின் பெயரை உரக்க சொல்லி அழைத்தார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அந்த கல்லூரி மாணவி வெளியே ஓடி வந்தார். மேலும் அக்கம், பக்கத்தினரும் அங்கு திரண்டு விட்டனர்.
உடனே ரவி, கல்லூரி மாணவியிடம், என்னை காதலிக்கிறேன் என்று கூறும்படி சத்தம் போட்டார். இல்லையெனில் என்னுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள் என்று கூறி கொண்டு தன் உடலில் பெட்ரோல் ஊற்றி கொண்டு தீ வைக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மீட்டனர்.
பின்னர் அவருக்கு தர்மஅடி கொடுத்து தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து ஓமலூர் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.