மோகனூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 7 ஆடுகள் செத்தன
மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி பகுதியில் மர்ம விலங்கு கடித்ததில் 7 வெள்ளாடுகள் செத்தன.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 46), விவசாயி. இவர் ஆடுகளும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவருக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வழக்கம்போல் வீட்டின் அருகே அடைத்து விட்டு சென்று விட்டார்.நேற்று காலையில் பார்த்தபோது மர்ம விலங்கு கடித்ததில் 7 ஆடுகள் படுகாயமடைந்த நிலையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்த ஆடுகள் இறப்புக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அருகில் உள்ள வீடுகளிலும் ஆடுகளை மர்ம விலங்கு கடித்துள்ளதா? என விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த பகுதியில் இரவு நேரங்களில் மர்ம விலங்குகள் நடமாட்டம் உள்ளதாகவும், அடிக்கடி இவ்வாறு நடப்பதால் பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.