நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும் தர்மபுரியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று தர்மபுரியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி துரைசாமி நாயுடு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துகாமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நடைபெற்ற யாகசாலை பூஜைகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் நேற்று கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் அமையும் ஆட்சியில் பங்கு பெறும். மத்திய அரசை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை விமர்சிப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறுவதுதான் அ.தி.மு.க.வின் கருத்து. அவர்களின் கருத்தை 1½ கோடி அ.தி.மு.க. தொண்டர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் தேவையான உதவிகளை செய்வார். தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணையாக இருக்கும். ஆவின்பாலின் தரம் சிறப்பாக இருப்பதால் இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் ஆவின்பாலை சந்தைப்படுத்த முகவர்கள், இறக்குமதியாளர்கள் கேட்டுள்ளனர்.
வருகிற 20-ந்தேதி டெல்லியில் ஹைடெக் ஆவின் பார்லர் திறக்கப்பட உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிக்க ஆவின்நெய்யை அனுப்ப ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பதிக்கு நெய் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.