பர்கூர் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி புதுமண தம்பதி பரிதாப சாவு திருமணமான 6 நாளில் சோகம்
பர்கூர் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் திருமணம் ஆன 6 நாளில் புதுமண தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
பர்கூர்,
இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அப்துல் ரகுமான் தெருவை சேர்ந்தவர் முனீர்அகமது. இவர் அந்த பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மகன் அப்துல் ரகுமான் ஹம்மத் (வயது 23). இவருக்கும் வாணியம்பாடியை சேர்ந்த ஜிகானா மாகின் (21) என்பவருக்கும் கடந்த 6 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் புதுமண தம்பதி இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் காரில் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் காரில் வாணியம்பாடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அப்துல் ரகுமான் ஹம்மத் ஓட்டி சென்றார். அவர்கள் வந்த கார், கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே உள்ள சின்னபர்கூர் பெட்ரோல் விற்பனை நிலையம் பக்கமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென கார் அப்துல் ரகுமான் ஹம்மத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, சாலையின் மறு திசைக்கு (சென்னை - கிருஷ்ணகிரி சாலை) வந்தது. அந்தநேரம், சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜிகானா மாகின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த அப்துல் ரகுமான் ஹம்மத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரி மற்றும் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 6 நாளில் புதுமண தம்பதி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.